மனமும் நாமும்
மனமும் நாமும்
மனம் தான் எல்லாம். எல்லாம் மனதில் தான் இருக்கிறது. மனம் நமது நண்பராக இருக்கலாம் அல்லது விரோதியாகவும் இருக்கலாம். அதை நமது சகாயத்திற்கும், நல்வாழ்விற்கும், சந்தோஷத்திற்கும், மன அமைதிக்கும் உபயாகித்துக் கொள்வது நம்மை பொருத்து இருக்கிறது.
ஒரு குறிக்கோள் உள்ளது. நாம் ஒவ்வொருவரும் இந்த உலகில் ஒரு குறிக்கோளோடு தான் உருவாக்கப்பட்டுள்ளோம். நாம் அதனுடன் இணைந்து சென்றாலும் அல்லது கிளர்ச்சி செய்தாலும் அந்தக் குறிக்கோள் நிறைவேற்றப்படும். ஆனால், ஒரு மாபெரும் ஆசி என்னவென்றால், நமது வாழ்நாளில் நமக்கு உதவ இந்த அற்புதமான “மனம்” அளிக்கப்பட்டுள்ளது. அதை நாம் திறமையுடனும், புத்திசாலித்தனமாகவும், விவேகத்துடனும் உபயோகிக்க வேண்டும். வாழ்வில் நெறி பிழறாமல், மனச்சோர்வு அடையாமல், மனம் குலைந்து போகாமல், திருப்தியுடனும், சந்தோஷமாகவும், மன அமைதியுடனும் வாழ்வதற்கு நாம் இந்த மனம் என்னும் கருவியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமது வாழ்க்கையின் பயணத்தைச் செய்யவும், நமது குறிக்கோள் நிறைவேறவும், கரடு முரடாகக் குலுங்கிச் செல்லும் ஒரு புயல் போல இல்லாமல், ஒரு இனிய மிருதுவான, சமமான தென்றல் போல நிகழ நாம் நமக்கே உதவி அளிக்க வேண்டும்.
நாம் புத்திசாலிகள். ஆனால் தான்மை என்னும் அகங்காரம் நம்மை எப்போதும் விவேகமாக நடந்துக் கொள்ள விடுவதில்லை. இங்கு தான் “கற்றுக் கொள்ளல்” அல்லது “அறிவு” அல்லது “விவேகம்” என்பது மிகவும் முக்கியமாகிறது. நமது உண்மைத் தன்னிலை சந்தோஷமானது. ஆனால் ஒரு பயிற்சி பெறாத மனம் நம்மை துன்பப்படச் செய்கிறது. அதை பயிற்றுவித்து, வழிகாட்டி, அறிவுடன் பழக்கபடுத்தினால், அது நம்மை திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ உதவும்.
ஆனால், கற்றுக் கொள்வது மட்டும் போதாது. பலர் கற்றுக் கொள்வதுடன் நிறுத்தி விடுகின்றனர். அதை செயல்படுத்துவதில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. அறிவும் பயிற்சியும் கூடவே செல்ல வேண்டும். இப்படி நாம் செய்தால், நாம் நமது மனதை வென்று, தினமும் உலகை கையாள வலிமையும், நன்னம்பிக்கையும், ஆர்வமும், உற்சாகமும் பெறுவோம்.
ஊக்கமுடன் இருங்கள்! உற்சாகத்துடன் இருங்கள்! நீங்கள் தனியே இல்லை! எல்லாம் நல்லபடி நிறைவேறும்!
அன்புடன்,
வசு (வசுந்தரா)