1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்
1.1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்
தாயுமானவர் திருப்பாடல்கள்
பாடல் 1 – வரிசை 1
[பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்]
அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கு முள்ள தெதுஅது
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
கருத்திற் கிசைந்ததுவே
கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
கருதிஅஞ் சலிசெய்குவாம். 1.
பொருள் :
இங்கு அங்கு என்று இல்லாமல் எங்கும் பிரகாசமாய்
பேரானந்தத்தால் பூர்த்தியாகி
அருளால் நிறைந்தது எது?
தனது அருள் நிறைந்த எல்லையற்ற பிரதேசத்தினுள்
எண்ணிலங்காத பிரபஞ்சங்களையெல்லாம் தங்கும்படி
இச்சை செய்து அங்கு உயிருக்கு உயிராய்
தழைத்தது எது?
மனதிலும் வாக்கிலும் நிலையாக நின்றது எது?
கணக்கற்ற மதங்களைச் சேர்ந்த பக்தர்கள் எல்லாம்
“இது என் தெய்வம், இது நம் தெய்வம்”
என்று தொடர்ந்து தமக்குள் வாதிடும்
தெய்வமாக நின்றது எது?
எங்கும் பரவி உள்ளதான
எல்லாவற்றிலும் மிக வல்லதான
ஒரு பிரக்ஞை உணர்வாகி
இன்பமாக என்றைக்கும் உள்ளது எது?
இரவு பகல் என்ற எல்லைகள், வரையறைகள்
இல்லாதது எது?
அது மனதிற்கு இசைந்ததாகும்.
காணும் விண் வெளி பிரதேசங்களையெல்லாம்
மௌனத்தால் நிரப்பியதும் அதுவே என்றும் கருதி
அதை நாம் பணிவுடன் அஞ்சலி செய்வோம்.
பொருள் : வசுந்தரா