1.2 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்
1.2 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்
தாயுமானவர் திருப்பாடல்கள்
பாடல் 1 – வரிசை 2
ஊரனந் தம்பெற்ற பேரனந் தஞ்சுற்றும்
உறவனந் தம்வினையினால்
உடலனந் தஞ்செயும் வினையனந் தங்கருத்
தோஅனந் தம்பெற்றபேர்
சீரனந் தஞ்சொர்க நரகமும் அனந்தநற்
றெய்வமும் அனந்தபேதந்
திகழ்கின்ற சமயமும் அனந்தமத னால்ஞான
சிற்சத்தியா லுணர்ந்து
காரனந் தங்கோடி வருஷித்த தென அன்பர்
கண்ணும்விண் ணுந்தேக்கவே
கருதரிய ஆனந்த மழைபொழியும் முகிலைநங்
கடவுளைத் துரியவடிவைப்
பேரனந் தம்பேசி மறையனந் தஞ்சொலும்
பெரியமௌ னத்தின்வைப்பைப்
பேசரும் அனந்தபத ஞான ஆ னந்தமாம்
பெரியபொரு ளைப்பணிகுவாம். 2.
பொருள் :
வசித்த இடங்கள் எண்ணற்றவை,
கொண்ட பெயர்கள் எண்ணற்றவை,
சுற்றத்தாரும் உறவினரும் எண்ணற்றவை,
பழவினையினால் கொண்ட உடல்கள் எண்ணற்றவை,
செய்யும் வினைகள் எண்ணற்றவை,
எண்ணும் கருத்துக்களோ எண்ணற்றவை,
பெற்ற பெயரும் புகழும் எண்ணற்றவை,
அனுபவித்த சொர்க்கமும் நரகமும் எண்ணற்றவை,
வழிபட்ட கடவுளும் எண்ணற்றவை,
பின்பற்றிய பலவித மதமும் எண்ணற்றவை,
எனவே, ஞான சித்த சக்தியாலும் அருளாலும் உணர்ந்து,
கருமேகத்திலிருந்து மழை அனந்த கோடியாகப் பொழிவது போல்
அன்பர்களின் கண்களிலும் விண்ணிலும் பொழிய,
அளவிலா பேரானந்த மழையைப் பொழியும்
அந்த தெய்வீக மேகத்தை,
நமது கடவுளை, துரிய வடிவை*[1],
எண்ணற்ற பக்தர்கள் பேசும்,
எண்ணற்ற மறை நூல்கள் சொல்லும்,
மாபெரும் மௌன பொக்கிஷத்தின் உள்ளமையை,
பேசுவதற்கே அரிய அனந்த நிலையான
ஞான ஆனந்தத்தை,
அந்த மாபெரும் பரம்பொருளை
நாம் பணிவுடன் அஞ்சலி செய்வோம்.
*[1] – துரீயம் என்பது நான்காவது ஞான நிலையான மௌன பிரக்ஞை உணர்வு. அது விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம், இந்த நிலைகளுக்கெல்லாம் அப்பால் உள்ளது.
பொருள் : வசுந்தரா