எளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது…

எளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது…

எளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது...

இந்த கட்டுரையின் இறுதியில் சில படங்கள் உள்ளன.

எனக்கு எப்போதுமே பேரம் பேசுவது பிடிக்காது. சிறு வயதிலிருந்தே, நான் இந்த விஷயத்தில் மற்றவரிடமிருந்து வேறுபட்டேன். வியாபாரி கேட்டதை விட குறைவாக தருவேன் என்று சொல்ல எனக்கு அவமானமாக இருந்தது.

பொதுவில் பலருக்கு பேரம் பேசுவது என்றால் மிக்க மகிழ்ச்சி! உண்மையில், அவர்கள் இதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு. நமக்கு ஒரு திரைப்படத்துக்கோ, கடற்கரைக்கோ போவது, அல்லது விளையாட்டுக்களில் ஈடுபடுவது போல அவர்களுக்கு பேரம் பேசுவது. காய்கறியோ அல்லது வேறு பொருட்களோ வாங்கப் போகவேண்டும் என்றால், பேரம் பேச ஒரு வாய்ப்பு உள்ளது என்று அவர்கள் கண்களில் ஒரு ஒளி தோன்றுகிறது. ஆனால், எனக்கென்னவோ பேரம் பேசுவது மகிழ்ச்சி தரவில்லை.

பல பேருக்கு பேரம் பேசுவதில் திறமை உள்ளது. அவர்களுக்கு எந்த விலையில் ஆரம்பிப்பது, எப்போது வியாபாரி பொருளின் தகுதியான விலையை விட அதிகமாக கேட்கிறார், எப்போது அவருடன் ஒத்துக்கொள்வது என்று அவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது. இதுவும் ஒரு விதத்தில் ஒரு கலை தான். நீங்கள் சொல்லலாம், “இந்தியாவில் பேரம் பேசுவது நிலைநாட்டியுள்ளது. இப்போது எப்படி நிறுத்த முடியும்?” இது உண்மை தான். ஒரு விலையுயர்ந்த பொருள், நகைகள், ஒரு கம்பளம், பண்டைய கால பொருட்கள், இப்படிப்பட்ட அடிக்கடி வாங்காத பொருட்களுக்கு பேரம் பேசினால் அதை நான் புரிந்துக் கொள்வேன். ஆனால், தெருவில் வாணிகம் செய்யும் எளிய விற்பனையாளரிடம் சில்லரைக் காசுக்காக பேரம் பேசுவது அவசியமா? 

இந்த காலத்தில் செல்வம் நிறைந்த நாடுகள் உள்பட உலகில் எங்கும் பேரம் பேசுவது வழங்கி வருகிறது. ஆனால், முன்பு நான் சொன்னது போல், ஒரு விலையுயர்ந்த பொருளுக்கு தான் உபயோகிக்கப் படுகிறது. காய்கறிகள், மற்றும் நமக்கு வாழ்வில் தினமும் தேவைப்படும் பொருட்களில் கூட இந்த வளம் மிகுந்த நாடுகளில் ஒரு விதத்தில் விலைகளைப் பார்த்து பொருள் வாங்குவது வழங்கி வருகிறது. ஆனால் வாடிக்கைக்காரர் வியாபாரியுடன் பேரம் பேசுவதில்லை. பல பொருட்களையும், விலைகளையும், வியாபாரி அல்லது கடைகளையும் பற்றி விசாரித்து, எங்கு எதை வாங்குவது என்று நிர்ணயிக்கின்றனர்.

இதை நான் மிகவும் விரும்புகிறேன். விலைகள் ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்டுள்ளன. பல பொருட்களிலிருந்து எனக்கு சரிப்படுவதை நான் தேர்ந்தெடுத்து வாங்க முடிகிறது. என்ன விலை சரியான விலையோ, விலை மிகவும் அதிகமோ, என்ன விலை கேட்பது என்றெல்லாம் யோசித்து “பேர விளையாட்டில்” ஈடுபட வேண்டிய அவசியமில்லை. மேலும் பேரத்தில் சில சமயம் நாம் அதிகமாக செலவு செய்து விட்டு நாம் மிகவும் கெட்டிக்காரர் என்று எண்ணிக்கொண்டு செல்வது நேரலாம்!

அதோடு இல்லாமல், பேரம் பேசி பொருள் வாங்குவதில் எல்லோரும் ஒரே விதமாக நடத்தப் படுவதில்லை. பேரத்தில் வல்லுனராக உள்ள ஒருவர் குறைவாக கொடுக்கலாம். மற்றொருவர் அதிகமாகக் கொடுக்கலாம். இதில் நியாயமென்ன?

ஆனால் பேரம் பேசுவதை நான் வெறுப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அது எளிய வியாபாரியிடம் உபயோகிக்கப் படுவது தான். பல ஆண்களும் பெண்களும் தங்கள் தின உணவுக்காகவும் செலவுக்காகவும் காய்கறிகளும் மற்ற சாதாரணப் பொருட்களும் விற்கின்றனர். அவர்கள் வருமானம் அவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கப் போவதில்லை. இத்தகைய மக்களுடன் பேரம் பேச எனக்கு மனம் வருவதில்லை.

பேரம் பேசுவது இழிவு என்று வேறொருவர் எழுதிய கட்டுரையொன்று நான் படித்தேன். இதற்கு மற்றொருவர் தன் கருத்தை பதிலாக அளித்திருந்தார். அவர் சொல்கிறார், “பேரங்காடிகளும், மற்ற பெரிய கடை வியாபாரிகளும் மின்சாரத்துக்காகவும், மேற்செலவுகளுக்காகவும் பணம் கட்டுகின்றனர். இந்த செலவெல்லாம் சின்ன எளிய வியாபாரிகளுக்கு கிடையாது, அவர்கள் எல்லா லாபத்தையும் எடுத்துக் கொள்கின்றனர், அதனால் பேரம் பேசுவதில் தவறில்லை” என்று. இது மிகவும் புத்திசாலித்தனமான வாதம் என்று அவர் நினத்துக் கொண்டிருக்கிறார். உண்மையில் எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை! தெருவில் விற்கும் எளிய கடைக்காரர் கோடி ரூபாய் லாபம் அடையப் போகிறாரா என்ன?  ஒருவேளை அவர், “இப்போதெல்லாம் எல்லாவற்றிலும் விலை அதிகமாகி விட்டது. எங்கெங்கு முடிகிறதோ அங்கெல்லாம் செலவைக் குறைப்பதற்காக பேரம் பேச வேண்டியிருக்கிறது “, என்று சொன்னால், நான் கட்டாயம் ஒத்துக் கொள்வேன். ஆனால் ஏழை வியாபாரி எல்லா லாபத்தையும் எடுத்துக் கொள்கிறார் என்று சொல்வது நகைச்சுவை தான்!

மேலும், கேள்வியானது “எளிய வியாபாரி சிறிது அதிகமாக கேட்கிறாரா?” என்று இருக்க கூடாது. கேள்வியானது “அவர் கேட்டதைக் கொடுக்க நம்மால் முடியுமா?” என்று இருக்க வேண்டும்.  இங்கு நாம் ஒரு எளிய விற்பனையாளரைப் பற்றி பேசுகிறோம், செலவந்தரைப் பற்றி அல்ல. நம்மால் முடிந்தால், அவர் சற்று அதிகமாகக் கேட்டால் அவர் கேட்டதைக் கொடுத்தால் தான் என்ன? நாம் கொஞ்சம் தாராள மனதுடன் இருந்தால் தான் என்ன? கடவுள் அருளால் நாம் ஏதோ கொஞ்சம் வளமுடனோ, சௌகரியங்களுடனோ இருக்கிறோம். நம்மை விட குறைந்த அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு கொஞ்சம் உதவினால் என்ன? அதோடு, நாம் எவ்வளவோ செலவுகள் அநாவசியமாக செய்கிறோம். சிலர் வரட்டு ஜம்பத்திற்காக, ஏற்கனவே செல்வந்தராக உள்ளவர்களுக்கு பணத்தை செலவழிக்கின்றனர். ஆனால், ஏழைகள் விஷயம் வரும்போது கணக்கு பார்க்கின்றனர். 

யார் அறிவார், காலம் செல்லச் செல்ல இந்தச் சிறு, தெரு வணிகர்கள் அடியோடு மறைந்தாலும் சொல்வதற்கில்லை. அவர்களை முற்றிலும் வேளியேற்றி, பெரிய கடைகளும், பேரங்காடிகளும் அவர்களுக்கு பதிலாக அமைந்தாலும் சொல்வதற்கில்லை. அதனால் அவர்களை முடிந்தவரை ஆதரித்து அனுவவிக்கலாம், இல்லையா? மேலும், மற்றவர்கள் துன்புறும்போது நாம் எப்படி இன்புற முடியும்?  இந்த உலகத்தின் எல்லா தொல்லைகளையும் நாம் தீர்க்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அல்லது இதையே தொழிலாகக் கொண்டு இலட்சியப் போர் செய்ய வேண்டும் என்றும் சொல்லவில்லை. தினம், தினம், இந்த எளியவர்களுக்கு தாராள மனதுடன் கொடுக்க ஒரு வாய்ப்பு வந்தால், அதை நாம் செய்யலாம் என்று தான் சொல்கிறேன். நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!

நான் எப்போதும் சொல்வது போல, நாம் செய்வதெல்லாம் பழக்க வழக்கத்தினால் தான். பொதிவில், யாரும் கஞ்சரோ, கருணையற்றவராகவோ இருப்பதில்லை. பேரம் பேசுவது ஒரு வழக்கமாகி விட்டது, அவ்வளவு தான். நாம் இதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை. உலக நியதி என்னவோ, மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அதன்படியே நாமும் நடந்துக் கொள்கிறோம். நமக்கு இது ஒரு சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் எளியவர்களுக்கு சிறிதளவு அதிக வருமானம் வந்தால், தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் உணவும் மற்ற தேவைகளையும் அளிப்பதற்கு எவ்வளவு உதவும் என்று நமக்குப் புரிவதில்லை. கொஞ்சம் அதிகமாக காசு கொடுத்தால், அவர்கள் முகத்தில் ஏற்படும் மலர்ச்சியும், ஆச்சரியமும் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி தரும் என்று நாம் அறிவதில்லை. மற்றோருக்குக் கொடுப்பதெல்லாம் பலமுறை, பலவிதத்தில் திரும்பி வரும், என்று நாம் புரிந்துக் கொள்வதில்லை.

முடிவில் நான் சொல்வது இது தான் : தெருவில் விற்கும் விற்பனையாளருக்கும், சிறு வியாபாரிக்கும் நாம் சிறிதளவு கருணைக் காட்டுவோம். பேரம் பேசுவதை புறக்கணிப்போம். எல்லோரும் சந்தோஷமாக இருப்போம்!

Bargain3
Customers choosing vegetables
Bargain8
Hope today we will make a little more money.
Bargain2
Vendor lady is waiting for a customer
Bargain9
How cheap can you get, Sir? We are poor.
Bargain1

I am a foreigner, so I don’t want to pay what you want.

Bargain7

Sorry, I’ve got to take a nap. I have worked too hard..

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!