தாயுமானவர் – அறிமுகம்
அற்புதமான ஞானி
தாயுமானவர் என்ற பெயர் “தாயும்” “ஆனவர்” என்ற இரண்டு சொற்களால் அமைக்கப் பட்டுள்ளது. அது கடவுள் அன்னையாகவும் அமைந்து பொழியும் கருணையையும் அன்பையும் குறிப்பிடுகிறது.
வாழ்க்கை வரலாறு
தாயுமானவர் (1705–1744), தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு வேதாந்த ஆன்மீக ஞானியாவார். இந்த முனிவரின் மகத்துவம் இந்தியாவில், முக்கியமாக தமிழ்நாட்டில், மேலும் உலகம் முழுவதும் கூட, உண்மையான ஆன்மீகர்களுக்கும் நன்றாகத் தெரியும்.
தாயுமானவர் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் வல்லுனரான அறிஞரும் கல்விமானும் ஆவார். அவர் திருச்சிராப்பள்ளியின் ராஜாவுக்கும் அமைச்சராக இருந்தார். அவரது பெயர் திருச்சி கோட்டை கோவிலில் விளங்கும் தெய்வத்தின் பெயரிலிருந்து வந்ததாகும். அவர் கடவுள் மீது மனதை ஆழ்ந்து செலுத்த ஆரம்பித்தவுடன் அவர் தனது தொழிலை விட்டு விட்டு, சிவ வழிபாட்டிலும், சைவ சித்தாந்த மெய்யியலின் அறவுரை கூறதலிலும் இடம் இடமாக அலைந்துக்கொண்டிருக்க ஆரம்பித்தார்.
தாயுமானவர் தாமே அனுபவித்து ஏராளமாக வெளிப்படுத்திய தெய்வீக பேரானந்தம், அவரது பாடல்களில் நிரம்பி வழிந்தது. ஆன்மா பரம்பொருளுடன் இணைவதற்காக ஏங்கும் விஷயத்தைப் பற்றிய இவரது பாடல்கள், அவற்றின் நம்பகத்தன்மை, சான்றுறுதி, எளிமை, எளிதாக நினைவு வைத்துக் கொள்ள உதவும் மொழி, இவற்றிற்காக மிகவும் பிரபலமானவையாகும்.
அதோடு மட்டுமில்லாமல், கடவுளை அடையும் எல்லா பாதைகள், மதங்கள், இவற்றின் ஒருமையையும் ஒற்றுமையையும் அவர் இடைவிடாமல் வலியுறுத்தி வந்தார். முக்கியாமாக வேதாந்தம், சைவ சித்தாந்தம், இவற்றின் ஒருமையை அவர் வலியுறுத்தி வந்தார்.
தாயுமானவர் சைவ சிந்தாந்த தத்துவதைத் தெளிவாக அறிவுறுத்தினார். அதோடு மட்டுமில்லாமல் அவரது துதிப்பாடல்கள் குணக் குறிப்பாடுகளுக்கெல்லாம் அப்பால் விளங்கும் உச்ச உயர்வான மெய்மையைப் பற்றியும் விவரித்தன. இந்த ஞானியின் திருப்பாடல்களில் புத்தி சார்ந்த விசாரணை, பக்தி – அதாவது புத்தி, இதயம் – இவற்றின் உன்னத கலவையாகும்.
திருப்பாடல்கள்
தமது மெய்யான சொரூபத்தை உணர்ந்து அறிந்த ஞானிகள், யோசனை செய்து தங்கள் கவிதைகளை எழுதுவதில்லை. அவர்களது ஞானமும் அனுபவமும் தெய்வீகப் பாடல்களாக மழை போல் பொழிகின்றன.
தாயுமானவர் எண்ணிலடங்காத தமிழ் துதிப்பாடல்கள் வழங்கினார். அவற்றில் 1454 பாடல்கள் கிடைப்பில் உள்ளது. அவரது முதல் மூன்று பாடல்கள், 250 வருடங்களுக்கு முன்பு, திருச்சிராப்பள்ளியில் நிகழ்ந்த மதங்களில் மாநாட்டில், பாடப்பட்டன. அவரது கவிதைகள் அவரது சொந்த ஆழ்நிலை அனுபவங்களையொட்டி செல்கின்றன; அதாவது ஒரே சமயத்தில் பக்தி நிறைந்ததாகவும், இரண்டில்லாத ஒன்றான அத்வைதமாகவும் விளங்குகின்ற அவரது அனுபவம்; அவர் கடவுளை பராபரமாகவும் எல்லாம் கடந்த நிலையாகவும் காண்கின்ற அனுபவம்.
மேலும் அவை தமிழ்நாட்டின் இந்து மத தத்துவத்தையும், மிக உயர்வான நிலையில் திருமூலரின் திருமந்திரத்தையும் வெளிப்படுத்துகின்றன.
அறிவுரைகள்
தாயுமானவரின் முக்கியான போதனை என்னெவெனில் மனதை ஒழுங்குபடுத்தி, ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்தி, சாந்தமாக அமைதியாக ஆழ்நிலை தியானம் செய்வதாகும்.
அவர் மேலும் இவ்வாறு சொன்னார் : “ஒரு யானையைக் கூட கட்டுப் படுத்தி விடலாம், ஒரு புலியின் வாலைக் கூட பிடித்துக் கொள்ளலாம், ஒரு பாம்பைக் கூட பிடித்துக் கொண்டு நடனமாடலாம், தேவதைகளைக் கூட கட்டளையிடலாம், இன்னொரு உடலில் கூட கூடு பாய்ந்து செய்யலாம், தண்ணீரின் மீது நடக்கலாம், பெருங்கடல் மீது உட்கார்ந்துக் கொள்ளலாம். ஆனால், இவற்றையெல்லாம் விட, மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாக சலனமின்றி இருப்பது கடினம்.”
தாயுமானவரின் அற்புதமான திருப்பாடல்கள் மிகவும் சக்தி வாய்ந்த ஆழ்ந்த அறிவுள்ள அறிவுரைகளாகும். ஆயினும், புரிந்துக் கொள்ளவும் பின்பற்றவும், அவை மிகவும் எளிதாக உள்ளன. நிலையான சந்தோஷம், ஆழ்நிலை தியானம், சுய விசாரணை, மேலும் வாழ்வின் மிகவும் உயர்ந்த குறிக்கோளான ஆன்ம சொரூப ஞானம் – இவை எல்லாவற்றிலும் தீவிரமான நாட்டம் கொண்ட எந்த ஆன்மீகருக்கும் இவை ஆழ்ந்த உள்ளொளியும், நுண்ணறிவும் அளிக்கின்றன. தாயுமானவரின் திருப்பாடல்கள் அவரது அருமையான, ஆழ்ந்த அறிவுரைகளை மிகவும் தெளிவான முறையில் வழங்குகின்றன.
திரு ரமண மகரிஷி பக்தர்களுக்கு அடிக்கடி தாயுமானவரின் சொற்களை குறிப்பிட்டு வந்தார்.
தாயுமானவரின் பாடல்களில் ஒன்று பின்வருமாறு:
திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் (1)
தாயுமானவர் திருப்பாடல்கள்
[பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்]
அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கு முள்ள தெதுஅது
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
கருத்திற் கிசைந்ததுவே
கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
கருதிஅஞ் சலிசெய்குவாம். 1.
பொருள் :
இங்கு அங்கு என்று இல்லாமல் எங்கும் பிரகாசமாய்
பேரானந்தத்தால் பூர்த்தியாகி
அருளால் நிறைந்தது எது?
தனது அருள் நிறைந்த எல்லையற்ற பிரதேசத்தினுள்
எண்ணிலங்காத பிரபஞ்சங்களையெல்லாம் தங்கும்படி
இச்சை செய்து அங்கு உயிருக்கு உயிராய்
தழைத்தது எது?
மனதிலும் வாக்கிலும் நிலையாக நின்றது எது?
கணக்கற்ற மதங்களைச் சேர்ந்த பக்தர்கள் எல்லாம்
“இது என் தெய்வம், இது நம் தெய்வம்”
என்று தொடர்ந்து தமக்குள் வாதிடும்
தெய்வமாக நின்றது எது?
எங்கும் பரவி உள்ளதான
எல்லாவற்றிலும் மிக வல்லதான
ஒரு பிரக்ஞை உணர்வாகி
இன்பமாக என்றைக்கும் உள்ளது எது?
இரவு பகல் என்ற எல்லைகள், வரையறைகள்
இல்லாதது எது?
அது மனதிற்கு இசைந்ததாகும்.
காணும் விண் வெளி பிரதேசங்களையெல்லாம்
மௌனத்தால் நிரப்பியதும் அதுவே என்றும் கருதி
அதை நாம் பணிவுடன் அஞ்சலி செய்வோம்.
பொருள் : வசுந்தரா
வாழ்த்து
மாபெரும் ஞானியும், ஆசானும், குருவுமான தாயுமானவரின் அறிவுரைகளைப் பெறுபவர் எவரும், உண்மையில் மிகுந்த அதிர்ஷ்டமும் கடவுளின் பேரருளும் கொண்டவர்களாவர்.