உண்மை எப்போதும் விளங்குகிறது

உண்மை எப்போதும் விளங்குகிறது

Truth-prevails-t

உண்மையைச் சொல்வதற்கு அதிகமான தைரியம் தேவை.  உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு அதை விட அதிகமான தைரியம் தேவை.

இந்த இரண்டு வாக்கியங்களைப் பற்றி சிறிதளவு விளக்கம் தருகிறேன்.

முதலில், “உண்மையைச் சொல்வதற்கு அதிகமான தைரியம் தேவை” என்ற வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம்.

கேட்பவருக்கு பிடிக்காது என்று தெரிந்தும், உண்மையை அவருக்குச் சொல்வது, மிகவும் கஷ்டமான விஷயங்களில் ஒன்றாகும்.

ஒரு உதாரணத்துடன் தொடங்குகிறேன்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட நபரின் நலனை விரும்புபவர் என்று வைத்துக் கொள்ளலாம். அவர்கள் உங்களது நெருங்கிய நண்பர் என்று வைத்துக் கொள்வோம். அவர்களது தோற்றம், தன்மை, பழக்க வழக்கம், வாழும் விதம், பழகும் நண்பர்கள், பண்புகள், நடத்தை, ஆரோக்கியம், இவற்றில் ஏதாவது சரியில்லை அல்லது அவர்களுக்கு நல்லதில்லை என்று நீங்கள் கருதலாம். அல்லது, அவர்கள் மற்றவர் ஒருவரால் ஏமாற்றப் படலாம், அதை நீங்கள் அவர்களுக்கு தெரிவிக்க விரும்பலாம். 

எனவே உண்மையை அந்த நண்பரிடம்  நீங்கள் சொல்ல விரும்புகிறீர்கள். ஆனால், அப்படி செய்ய தயங்குகிறீர்கள். ஏனெனில், கேட்பவர் உங்கள் மீது எரிச்சலும் கோபமும் கொள்வார், அல்லது உங்களுடன் வாதிடுவார், சண்டைப் போடுவார் என்று நீங்கள் பயப்படுகிறீர்கள். அல்லது, உங்களுக்கு இது சங்கடமாக இருக்கிறது. எப்படி சொல்வதன்று தெரிவதில்லை. 

ஆனால், உங்களுக்கு உண்மையில் ஒருவர் மீது அக்கறை இருந்தால், உண்மையைச் சொல்லத்தான் வேண்டும், இல்லையா? ஏனெனில், உண்மையைச் சொல்வதால், சொல்பவருக்கும் நன்மை, கேட்பவருக்கும் நன்மை.

உண்மையைக் கேட்பவருக்கு நன்மை எப்படி என்றால், யார் அவரது உண்மையான நண்பர் என்று தெரிய வருகிறது. மேலும், முதலில் அவர்களுக்கு எரிச்சலும் கோபமும் வந்தாலும், பிறகு அவர்கள் உண்மையை உணர்ந்து கொள்வார்கள்.

உண்மையைச் சொல்பவருக்கு நன்மை எப்படி என்றால், அது அவர்களை விடுவிக்கிறது.  மற்றவரின் நன்மைக்காக என்று தெரிந்தும் உண்மையைச் சொல்லாமல் இருப்பதால் ஏற்படும் குற்றமுள்ள நெஞ்சு இருக்காது. அதற்கு பதிலாக மனம் லேசாகவும் விசாலமாகவும் இருக்கும். ஒருவருக்கு நல்லது செய்தோம் என்ற சந்தோஷமும் ஏற்படும்.

இருந்தாலும், சொல்வதற்கு எளிதாக இருந்தாலும், நடைமுறையில் உண்மையைச் சொல்வது கடினம் என்று எல்லோருக்கும் தெரியும்.

நாம் சாதாரணமாக ஒரு அன்பருக்கோ நண்பருக்கோ உண்மையைச் சொல்ல தயங்குவதற்குக் காரணம், அவர்களது அன்பையும் நட்பையும் நாம் இழந்து விடுவோமோ என்ற பயம் தான்.

நாம் பொது சமூகத்திற்கு உண்மையைச் சொல்ல தயங்குவதற்குக் காரணம், மக்கள் அபிமானத்தையும் நன்மதிப்பையும் அதானால் விளையும் லாபங்களையும் இழந்து விடுவோமோ என்ற பயம் தான்.

எனவே, இதையெல்லாம் மீறி, உண்மையைச் சொல்வதற்கு மிகவும் அதிகமான தைரியம் தேவை.

 

இப்போது, இரணடாவது வாக்கியத்தைப் பற்றி பேசுவோம். “உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு இன்னும் அதிகமான தைரியம் தேவை.”

இதன் பொருள் என்ன?

ஒரு உதாரணம் தருகிறேன்.

யாராவது உங்களைப் பற்றிய ஒரு உண்மையை உங்களிடம் சொல்லலாம். அந்த நபர் உங்கள் நலனை விரும்புபவர் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் உங்களிடம் காணும் ஏதோ ஒன்று உங்களுக்குப் பொருத்தமில்லை என்றோ அல்லது உங்களுக்கு நல்லதில்லை என்றோ கருதலாம்.

எப்படியோ தைரியத்தைத் திரட்டிக் கொண்டு அந்த நபர் உங்களிடம் உண்மையைத் தெரிவிக்கிறார். ஆனால், அதை ஏற்றுக் கொள்வது உங்களுக்கு எளிதாக இருக்கிறதா? இல்லை.

உண்மையை ஏற்றுக்கொள்வதனுடன் ஒப்பிட்டால், உண்மையைச் சொல்வது மிகவும் எளிதாகத் தோன்றுகிறது, இல்லையா? ஏனெனில், தன்னிடம் ஒரு குறை உள்ளது என்றோ, தன்னிடம் ஒரு கெட்ட வழக்கம் இருக்கிறது என்றோ, அல்லது செய்தது தவறு என்றோ, அல்லது தான் நடந்துக் கொண்ட விதம் முட்டாள்தனமானது என்றோ யாரும் ஒத்துக் கொள்ள விரும்ப மாட்டார். உண்மையை ஏற்றுக் கொண்டு, தன்னைத் திருத்திக் கொள்வதற்கு மிகவும் அதிகமான தைரியமும் துணிவும் தேவை.

இதை மேலும் தெளிவாக விளங்க வைக்க இன்னும் ஒரு உதாரணம் தர விரும்புகிறேன்.

மனிதர்கள் தங்கள் வாழ்வில் விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் உண்மையில், வேறு ஏதோ நடந்து விடுகிறது. தனக்கு பூரணமான உடல்நிலை இருப்பதாக ஒருவர் நினைக்கலாம். ஆனால் திடீரென்று அவருக்கு ஒரு கொடிய நோய் இருப்பதாகத் தெரிவிக்கப் படலாம்.

அல்லது சிலர், வாழ்க்கையில் சில குறிப்பிட்ட பண்புகளையும் சம்பிரதாயமான கருத்துக்களையும் நம்பலாம். தங்கள் குழந்தைகள் இப்படி இருக்க வேண்டும், இப்படி வாழ வேண்டும், இந்த பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் அவர்களின் கருத்துக்களுக்கு மாறாக அவர்களது பிள்ளையோ பெண்ணோ வேறு விதமான வாழ்க்கை விதத்தைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அதிர்ச்சி தரலாம். அல்லது ஒருவர் போதைப் பொருட்களுக்கு அடிமையாக ஆகி விட்டு, ஆனால் அதை ஒப்புக்கொள்ள விரும்பாமல் இருக்கலாம். உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு மிகவும் அதிகமான தைரியம் தேவை.

அதனால் தான் உறுதியாகச் சொல்கிறேன்.

உண்மையைச் சொல்வதற்கு அதிகமான தைரியம் தேவை.  உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு அதை விட அதிகமான தைரியம் தேவை.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!