நான் யோசிப்பதால் இருக்கிறேன்; நான் எப்போதும் இருக்கிறேன்; இதில் எது உண்மை?
நான் யோசிப்பதால் இருக்கிறேன்; நான் எப்போதும் இருக்கிறேன்; இதில் எது உண்மை?
நான் யோசிப்பதால் இருக்கிறேன்; நான் எப்போதும் இருக்கிறேன்; இதில் எது உண்மை?
நான் எப்போதும் இருக்கிறேன். ஆமாம். ஒவ்வொருவரும் இதைத் தான் உணருகிறார்கள். தாம் இருப்பதை யாருமே மருப்பதில்லை. ஆனால், ஒரு பிரபலமான ஆங்கில கருத்து ஒன்று இருக்கிறது. அது என்னவெனில், “I think, therefore I am!” அதாவது, “நான் யோசிக்கிறேன், அதனால் நான் இருக்கிறேன்” என்பதாகும். இந்த கருத்து “நான் எப்போதும் இருக்கிறேன்” என்ற உணர்வை மறுக்கிறது. இந்த முரண்பாட்டைப் பற்றி இங்கு நான் விளக்கம் அளிக்கிறேன்.
நான் குறிப்பிடும் பிரபலமான கருத்து பின்வருமாறு.
“நான் யோசிக்கிறேன்; அதனால் நான் இருக்கிறேன்”. இது தான் சொல்லப்படுகிறது. இதை பல பேர் மிகவும் புத்திசாலித்தனம் என்று கருதுகிறார்கள். இது சரியா?
பிரபலமான பழமொழி என்னவென்றால், “நான் நினைக்கிறேன், அதனால் இருக்கிறேன்!” என்பதாகும். ஆனால் நான் தூக்கத்தில் நினைப்பதில்லை. அதனால் தூக்கத்தில் நான் இல்லை என்று பொருளா? உண்மை என்னவெனில், நான் தூக்கத்திலும், கனவிலும், விழிப்பிலும் உள்ளேன். எண்ணங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் எப்போதும் இருக்கிறேன்.
சரி, இப்போது நாம் ஒருவர் யோசித்தாலும் யோசிக்காவிட்டாலும், எப்பொதும் இருக்கிறார் என்பதை வலியுறுத்திவிட்டோம். மனம் செயல்படாவிட்டால் கூட, தூய உள்ளமை எப்போதும் விளங்குகிறது என்பது இப்போது நமக்கு தெரிகிறது. இருந்தாலும் விஷயங்களை ஆய்ந்து சிந்திக்கும் நபர்களுக்கு, “நான் யோசிக்கிறேன்; அதனால் நான் இருக்கிறேன்” என்று சொல்லப்படுவது மேலும் சில கேள்விகளை எழுப்புகிறது. இதெல்லாம் சரி தான், ஆனால் பிறப்பதற்கு முன்னால், அல்லது காலமான பிறகு, இந்த நிலைகளில் ஒருவரின் தன்மை என்ன? இந்த நிலைகளில் “நான்” என்பது யார்? இவ்வாறு கேள்விகள் எழுகின்றன.
அதோடு மட்டுமில்லாமல், ஒருவர் கனவே இல்லாமல் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, எண்ணங்களே இல்லை. ஆனால், விழித்திருக்கும் போது எண்ணங்கள் எழுகின்றன. இந்த எண்ணங்கள், யோசனைகள் எங்கிருந்து வருகின்றன? எண்ணங்கள் இருந்தா, இந்த நிலையில், ஒரு “யோசிக்கும் நான்” இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த “நான்” யார்? “யோசிக்கும் நான்”, எப்போதும் விளங்கி வரும் “உள்ளமை நான்”, இவை இரண்டும் வெவ்வேறானவையா? அதன்படி பார்த்தால், வெவ்வேறான இரண்டு “நான்” இருக்கிறார்களா அல்லது அவை இரண்டும் ஒரே “நான்” தானா?
மேலும், எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமான கேள்வி என்னவென்றால், ஆழ்ந்த தூக்கத்தில் மிகுந்த மன அமைதியும், நிம்மதியும் இருக்கிறது; ஆனால் விழிப்பு நிலையில் சந்தோஷம் இருப்பதில்லை, துயரம் இருக்கிறது. விழிப்பு நிலையில் அவ்வப்போது சிறிதளவு சந்தோஷம் இருந்தாலும், அந்த சந்தோஷம் நிலைத்திருப்பதில்லை, அல்லது மன அலைச்சலுடனும் துன்பத்துடனும் கலந்து இருக்கிறது. அல்லது ஒரு சமயத்தில் மகிழ்ச்சி அளித்த நபர்களோ பொருட்களோ, மற்றொரு சமயத்தில் தொல்லகளும் அளிக்கிறார்கள். இந்த நிலைகளில் ஏன் இந்த வித்தியாசம்?
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் பின்வருமாறு தொகுத்துச் சொல்லப்படலாம். உண்மை என்னவென்றால், ஒரே ஒரு “நான்” தான் இருக்கிறது. அந்த தூய “நான்” எப்போதும் விளங்கி வருகிறது. அது நிரந்தமானது, இறப்பே இல்லாதது, எப்போதும் விளங்குவது. அதன் தன்மை தூய உள்ளமை, தூய விழிப்புணர்வு, தூய பேரானந்தம். அது எண்னங்களால் மாசு படுத்தப் படுவதில்லை. அது ஒன்றோடும் இணந்தத்தில்லை; பந்தத்திலிருந்து விடுபட்டு இருக்கிறது. அதைப் பற்றி நாம் சிறிதளவு உணர்வது ஆழ்ந்த தூக்கத்தில் தான். ஆனாலும், தூக்கத்தில் அதை நாம் அறிவதில்லை; அங்கு ஆழ்ந்த அறியாமையில் மூழ்கி இருக்கிறோம்.
ஒருவர் தூக்கத்திலிருந்து விழிக்கும் போது, அந்த அமைதியான, சாந்தி நிறைந்த நிலையிலிருந்து தான்மை அகங்காரம் என்று சொல்லப்படும் “நான்” என்ற எண்ணம் எழுகிறது. அது தான் “ego” என்று சொல்லப்படுகிறது.அது தான் ஒருவர் தான் காணும் முழு பிரபஞ்சத்தையே எழச் செய்கிறது. அது தான் உடல் இன்னல்களுக்கும், மனத் துயரங்களுக்கும் காரணமாகும். அது மெய்யான சந்தோஷத் தன்மையை மறைத்து, உலகத்தை வெளிப்படுத்தி பல வித பெருங்கேடுகளை வெளிப்படுத்திக் காட்டுகிறது. இந்த “நான்” என்ற எண்ணம் மெய்யானது இல்லை. அது ஒருவரின் எல்லா நிலைகளிலும் இருப்பதில்லை. எங்கிருந்து இந்த பொய்யான “நான்” எழுகிறதோ, அந்த மெய்யான உள்ளமை, தூய விழிப்புணர்வு எப்போதும் இருக்கிறது. அது பிறப்பையும் இறப்பையும் கடந்து விளங்குகிறது.
நாம் பல பேர் இறப்பதைக் காண்கிறோம், ஆனாலும் நாம் ஒரு போதும் இறக்க மாட்டோம், எப்போதும் இருப்போம் என்ற உணர்வு நமக்கு இருக்கிறது. ஏனெனில், இது தான் உண்மை. உண்மை என்னவென்றால், தூய உள்ளமையான “நான்” ஒரு போதும் இறப்பதில்லை; உடல் தான் இறக்கிறது. நாம் வெறும் உடல் இல்லை, நாம் உண்மையில் சச்சிதானந்தமான தூய உள்ளமை, தூய விழிப்புணர்வு, தூய பேரானந்தம் தான், என்பதை அறிந்து உணர்வது தான் ஒருவரின் பிறப்பின் குறிக்கோளாகும், நோக்கமாகும்.
இதையெல்லாம் ஒருவர் முதலில் புத்தியினால் நன்றாக ஆய்ந்து புரிந்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை அவர் பயிற்சி செய்ய வேண்டும். இதற்கு ஒரு ஆசான் அல்லது ஒரு குருவின் உதவி தேவைப்படும். தானே அனுபவத்தில் இதையெல்லாம் உணர்ந்துக் கொண்ட ஒரு மாபெரும் மகானின் அறிவுரைகள் தான் மிகவும் உபயோகமாக இருக்க முடியும். எனவே நிலையான சந்தோஷத்தையும், மன வலிமையையும், சாசுவதத்தையும் விரும்பும் ஒரு நபர், இத்தகைய ஒரு ஆசானின், குருவின் அறிவுரைகளை கேட்டு புரிந்துக் கொண்டு பிறகு அவற்றை சிறிது சிறிதாக பயிற்சி செய்ய வேண்டும். ஒரு நபர் இவ்வாறு செய்தால், அவருக்கும் அவரைச் சார்ந்தும் சுற்றிலும் இருப்போர்களுக்கும் நிச்சயமாக ஒரு சொல்ல முடியாத சந்தோஷமும் மன அமைதியும் கிடைக்கும்.