மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும்
மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும்
தயாள குணம் ஒருவரது சுய தன்மை என்று நீங்கள் சொன்னால், நான் உங்களுடன் ஒத்துக்கொள்கிறேன். பணக்காரரோ ஏழையோ, பெண்களோ ஆண்களோ, உலகில் சிலர் பெருந்தன்மை உள்ளவர், சிலர் இல்லாதவர். உண்மை தான்.
ஆனாலும் நம்மில் தானம், தருமம் தரக் கூடிய பலர் அப்படி செய்யாததற்குக் காரணம் தானத்தைப் பற்றிய தவறான அபிப்ராயம் உள்ளதாலும், மற்றோருக்கு தாராளமாகக் கொடுப்பதால் வரும் நன்மைகளைப் பற்றி அறியாததாலும், குடும்பத்தின் வழக்கப்படி நடப்பதாலும் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
சுருங்கச் சொன்னால், நமக்கு தாராள மனம் இருப்பதும் இல்லாததும் பழக்க வழக்கம் தான். நாம் அதைப் பற்றி சிந்திப்பதில்லை. உலகில் பொதுவான எண்ணம் என்னவெனில், “உனக்கும் உனது குடும்பத்துக்கும் செலவு செய்துக்கொள். மற்றவர்களுக்கு ஒன்றும் கொடுக்காதே, செலவு செய்யாதே!” இது நம்மில் உள்ள ஆழ்ந்த கருத்து.
வேடிக்கை என்னவெனில், சிலர் தமக்கே கூட செலவு செய்வதில்லை! தங்களிடம் சேகரித்து வைத்த பணத்தை அடிக்கடி பார்த்தும், வங்கியில் எவ்வளவு செல்வம் இருக்கிறது என்று அவ்வப்போது எண்ணிக்கை செய்துக் கொண்டும் மகிழ்கின்றனர்.
நான் ஒரு சமயத்தில் பணக்காரர்கள் கட்டாயம் மிகவும் தாராள குணமுள்ளவர்களாக இருப்பார்கள் என்று எண்ணினேன். பிறகு இது நிஜமில்லை என்று புரிந்தது. உண்மை என்னவெனில், கோடீஸ்வரர்கள் மற்ற செல்வந்தர்களூடன் போட்டி போட்டுக் கொண்டு, அவர்களை விட அதிக பணக்காரர்களாக இருக்க முயற்சி செய்கின்றனர். அவர்கள் சாதாரண உலகிலிருந்து வெகு தூரம் போய், தங்களுடைய அதிகாரம், இறுமாப்பு கொண்ட உலகில் வாழ்கின்றனர். சாதாரண மக்களின் முக்கிய தேவைகளைப் பற்றி சிந்திக்கும் தன்மையை இழந்து விடுகின்றனர்.
நான் என்ன சுட்டிக் காட்ட முயற்சி செய்கிறேன் என்றால், மற்றவர்களுக்குக் கொடுக்க நாம் இலட்சாதிபதியாகவோ கோடீஸ்வரராகவோ இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. நம்மால் முடிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொண்டால் நல்லது தான். நான் தினம் தினம் வாழும் சாதாரண வாழ்க்கையைப் பற்றி பேசுகிறேன். மற்றவர்களுக்கு கொடுப்பதற்கு தானாக ஒரு வாய்ப்பு வந்தால், தாராள மனத்துடன் உதவி செய்யலாம். அவ்வளவு தான். இதையே தொழிலாகக் கொள்ள வேண்டியதில்லை.
நாம் எதைச் செய்தாலும் சந்தோஷமாக இருப்பதற்காகத் தான் செய்கிறோம். நாம் மற்றவர்களுக்கு சிறிதளவு ஈகை அளிக்கும்போது நம்முடன் இன்னொருவரும் மகிழ்வார். நாம் கொடுத்தால் மற்றவருக்கு நன்மை வரும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதனால் நமக்கு எவ்வளவு நன்மை வரும் என்பது பலருக்கு தெரியாது. பெறுபவரின் முக மலர்ச்சியால் நமது இதயத்தில் அன்பும், நற்குணமும், ஆனந்தமும் பெருகுகிறது. “எதை நாம் கொடுக்கிறோமோ அது நமக்கு அதிகமாக திரும்பி வரும்” என்ற சாதாரண வாக்கியம் உண்மையில் மிகப் பெரிய காவியம் தான்.
பணத்தைத் தவிர நாம் பலவிதத்தில் மற்றவர்களூக்கு உதவலாம். நமது நேரத்தில் சிரிதளவு தரலாம். துன்பப் படுவோருக்கு ஆதரவு, உடல் நலமில்லாதோர்க்கு உதவி, மற்றவர்களின் வேலைகளில் சில செய்தல், இவையெல்லாம் தருமம் தான். ஆனால் பெரும்பாலோருக்கு செல்வத்தைப் பகிர்ந்துக் கொள்வது தான் கடினம். அதனால் அதைப் பற்றி தான் இங்கு நான் கவனம் செலுத்துகிறேன்.
நாட்டில் நலம் உண்டாக பணம் ஒரே இடத்தில் தேங்கக் கூடாது. அது பரவி எல்லா இடத்திலும் பெருக வேண்டும். அதை கொடுக்கவும் வேண்டும், பெறவும் வேண்டும். தங்கள் வாழ்க்கையை முன்னேற்ற முயற்சி செய்யும் எல்லோருக்கும் செல்வம் பரவி பெருக வேண்டும்.
ஆனால், தங்களது தலைவிதியோ, அல்லது துரதிர்ஷ்டமோ, அல்லது வெறென்னவோ காரணத்தால், சிலரால் தங்கள் வாழ்க்கையை நேர் நிலைக்குக் கொண்டு வர முடிவதில்லை. இந்த சந்தர்ப்பங்களில் அவர்களூக்கு நல்ல நிலையில் இருப்பவர்கள் உதவி செய்தால் நன்றாக இருக்கும். ஒரு முறை கொடுத்ததும், அடுத்த முறை எளிதாகும். கொடுத்தது பல முறை திரும்பி வரும் என்று புரிந்ததும், செல்வத்தைப் பகிர்ந்துக் கொள்வது இனிப்பை உண்பது போல தான்!
மற்றவர்களுக்கு உதவ ஒரு சிறிய பயிற்சி என்னவென்றால், நமக்கு சேவை செய்வோருக்கு சிறிது கூடுதலாக பணம் தரலாம். உணவகத்திலோ, அல்லது ரயில் நிலையத்திலோ அல்லது ஹோட்டலிலோ நமக்காக வேலை செய்பவருக்கு சற்று அதிகமாக தரலாம்.
நாம் தங்கும் ஹோட்டலில் வேலை செய்பவர் எவ்வளவு உழைக்கின்றனர்! அதைப் பற்றி யாராவது சிந்திக்கிறார்களா? ஏழைளை ஆதரிப்பது நமது கடமையில்லையா? காய்கறிகள் வாங்கும் போது ஒரு முறையாவது அவர்கள் கேட்டதை கொடுத்தால் தான் என்ன? கொடுத்துப் பாருங்கள். அதன் இன்பமே தனி தான். அவர்கள் உங்களை வாழ்த்துவார்கள். எல்லோரும் ஒரு சமயம் பெறும் நிலையில் இருப்போம், ஒரு சமயம் தரும் நிலையில் இருப்போம். கடவுளின் அருளால் நாம் பெறும் நிலையில் இல்லாமல் தரும் நிலையில் இருப்பது ஒரு ஆசீர்வாதம் தானே? அதற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் இல்லையா?
ஒன்று சொல்ல மறந்து விட்டேன். உங்களுக்கு தாராள மனம் வரும்போது உடனே கொடுப்பது அவசியம். இல்லையெனில், ஒரு கணத்தில் உங்கள் மனதில் கொடுக்காமல் இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் எழும்!
தாராளமாக கொடுப்பதற்கு மற்றொரு நேரம், நாம் நமது நண்பர்களின் விருந்துக்கு செல்லும்போது இருப்பதற்குள் மலிவான அன்பளிப்பைத் தேடுவது. அந்த நண்பர் நமது தம்பியோ தங்கையோ அன்பரோ என்றால் இவ்வளவு யோசிப்போமா? மேலும், மிகவும் மலிவான அன்பளிப்பு கொடுத்தால், அவர்கள் மனதில் நம்மைப் பற்றி ஒரு மோசமான அபிப்ராயம் அமையும்.
சில சமயம் வீட்டில் ஒரு பெரிய வேலைக்கு அதிக செலவு இருக்கும்போது அந்த வேலை செய்பவர்களை நான் நினைத்துக் கொள்வேன். “அவர்களும் பணம் சம்பாதிக்க வேண்டும் இல்லையா? அதனால் இந்த செலவு சரிதான்.” சில சமயம் எடுபிடி ஆள் ஒருவர் நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக் கேட்டால், இதையே தான் நினைத்துக் கொள்வேன். ஆனால், ஜாக்கிரதை, இது ஊதாரித்தனத்திற்கு ஒரு விடிவிப்பு இல்லை! பொறுப்புடன் யோசித்து சந்தர்ப்பத்திற்கு தகுந்தபடி முடிவு செய்வது அவசியம். செல்வத்தையும் உணவையும் வீணாக்கக் கூடாது.
எனவே, அனைவருக்கும் என் பரிந்துரை என்னவெனில், “தகுதியானவர்களுக்கு தாராளமாகக் கொடுங்கள்! சந்தோஷமாகக் கொடுங்கள்! அது உங்களுக்கு மிக்க மகிழ்ச்சி தரும்!” ஆனால் பதிலுக்கு ஒன்றும் எதிர்பார்க்காதீர்கள். அது உங்களுக்கு வரும் வெகுமானங்களை விலக்கி விடும். ஒரு ரோஜா மலரையோ அல்லது மல்லிகைப் பூவையோ நினைத்துக் கொள்ளுங்கள். அது தாராளமாக அழகையும் நறுமணத்தையும் நமக்கு அளிக்கிறது, ஆனால் பதிலுக்கு நம்மிடமிருந்து ஒன்றும் எதிர்பார்ப்பதில்லை. நாமும் அப்படியே இருப்போம்!