குதர்க்கமான விமர்சனத்தை சட்டை செய்யாதீர்கள் (கட்டுரை)
குதர்க்கமான விமர்சனத்தை சட்டை செய்யாதீர்கள் (கட்டுரை)
விஷயம் மிகவும் எளிதானது தான். நீங்கள் நல்லவர் இல்லை என்று யாரையும் சொல்ல விடாதீர்கள். உண்மையில், மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. நீங்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். உங்களை நீங்களே மதிப்பிடுங்கள். ஏதாவது தவறு தெரிந்தால், அதைச் சரிப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களை மகிழ்விக்க மட்டுமே இல்லாமல், அது உங்களுக்கே நல்லது என்பதற்காகத் திருத்திக் கொள்ளுங்கள்.
குதர்க்கமான, எதிர்மறையான விமர்சனங்களோ அல்லது உபயோகமில்லாத ஆலோசனைகளோ தருவதற்கு, ஒருவரையும் அனுமதிக்காதீர்கள். ஏனெனில் அவை உங்களுக்கு உதவாது. அதற்கு மாறாக, அவை உங்களது நலனையும் சந்தோஷத்தையும் பாதிக்கக் கூடும். யாருடைய விமர்சனமாவது உங்களை மட்டமாகவோ, அல்லது உங்கள் தரத்தை விட தாழ்வாகவோ கருத வைத்தால், அல்லது உங்களை சந்தோஷமாக இருக்க விடாமல் துன்புறுத்தினால், அது தான் எதிர்மறையான, குதர்க்கமான விமரிசனம். அது உங்கள் குணத்தையே தாக்கினாலோ, அல்லது நீங்களே உங்களைப் பற்றி தாழ்வாக நினைக்க வைத்தாலோ, அல்லது உங்களை தன்னம்பிக்கை இழந்து பலவீனமாக இருக்க வைத்தாலோ, அது தான் எதிர்மறையான, குதர்க்கமான விமரிசனம்.
ஒரு விஷயம் இங்கு சொல்ல வேண்டும். நல்ல சொற்கள், விவேகமான அறிவுரைகள், நேர்மறையான விமர்சனங்கள் போன்றவை நம்மேல் உண்மையான அக்கறையும் அன்பும் உள்ளவர்களிடமிருந்து நமக்கு வரலாம். நமக்கு மெய்யாக உதவுவது அவர்களுடைய நோக்கமாக இருக்கலாம். இது மிகவும் நல்லது. நாம் எப்போதும் மற்றவர்களின் நேர்மறையான விமர்சனங்களையும், நமது சுய முன்னேற்றத்துக்காக அளிக்கப்படும் அறிவுரைகளையும் கட்டாயம் கேட்டுக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவை நம்மைப் பற்றி புறநிலையிலிருந்து ஒரு நோக்கம் அளிப்பதால், நாம் கவலையோ துயரமோ கொள்ளாமல் நமது தன்மையில் முன்னேற்றம் உண்டாக்க அவை உதவும்.
அதற்கு மாறாக, குதர்க்கமான சொற்களை, அவை யாரிடமிருந்து வந்தாலும், அவர்கள் எவ்வளவு நெருங்கியவர்களாக இருந்தாலும், அவற்றை நாம் லட்சியம் செய்யக் கூடாது. ஏனெனில் அவை நமக்கு எந்த விதத்திலும் உபயோகப்படாது.
தயவு செய்து குதர்க்கமான விமர்சனத்தை சட்டை செய்யாதீர்கள். சிறிது சிறிதாக யார் நல்ல ஆலோசனை தருகிறார்கள், யார் குதர்க்கமாக பேசுகிறார்கள் என்று அறிந்துக் கொள்ளுங்கள். யார் உங்களுக்கு இன்னல் தருகிறார்களோ அவர்களை விட்டு அகன்று இருங்கள். யார் உங்களை உள்ளுக்குள் மேன்மையாக உணர உதவுகிறார்களோ, அவர்களுடன் சகவாசம் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் நலனை எப்போதும் கவனித்துக் கொள்ளுங்கள்.