மனதில் புத்துணர்வு கொள்ள 5 எளிதான வழிகள்
மனதில் புத்துணர்வு கொள்ள 5 எளிதான வழிகள்
வாழ்வில் பெரும்பாலான சமயங்களில், சாதாரணமான நடவடிக்கைகள் மிகவும் அதிக பலன்கள் தருகின்றன.
இதை எல்லாம், அல்லது சிலவற்றையாவது, சிறிதளவு தினமும் செய்ய வேண்டும். உங்கள் மனதில் புத்துணர்ச்சி தோன்றவும், அமைதியாகவும், மன சாந்தியுடனும் இருக்கவும் இவை உங்களுக்கு மிகவும் உதவும்.
1. உடற்பயிற்சி. நடத்தல், ஓடுதல், நீந்துதல் போன்ற இதயத்திற்கு நன்மை தரும் பயிற்சிகள் செய்ய வேண்டும். கடற்கரை, நந்தவனம், பூங்கா, அமைதியான வீதிகள், இத்தகைய இடங்களில் நடப்பது மிகவும் நல்லது. அல்லது உடற்பயிற்சி எந்திரத்திலும் நடக்கலாம்.
2. தசைப்பயிற்சி. தசைகளை நெகிழ்வாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். இந்த பயிற்சிகளை செய்யும்போது, ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, பின் அதே போல் வெளியிலும் விட வேண்டும்.
3. பிராணாயாமம். எளிதான பிராணாயாமத்தை 5 நிமிடங்களுக்குச் செய்ய வேண்டும். கண்களை மூடிக்கொண்டு, மூச்சு விடுவதை கவனிக்க வேண்டும் – மென்மையான, அமைதியான மூச்சு – உள்ளிழுத்தல், வெளியில் விடுதல். கடினமான முறைகள் தேவையில்லை. சாதாரணமான மூச்சு விடுதல், அதை கவனித்தல்.
4. ஆழ்நிலை தியானம். காலையில் முதலாவதாக, மற்ற உலக அலுவல்களில் மனம் ஆழ்வதற்கு முன், அல்லது தூங்கச் செல்வதற்கு முன், உங்கள் சௌகரியத்திற்குத் தகுந்தபடி, இதைச் செய்ய வேண்டும். கண்களை மூடிக் கொள்ள வேண்டும். எண்ணங்கள் வர ஆரம்பிக்கும். அவை வரும்போதே, அவை எங்கிருந்து வருகின்றன என்று பார்க்க வேண்டும். அல்லது, அமைதியாக மனதில், “யாருக்கு இந்த எண்ணங்கள் வருகின்றன என்று கேட்க வேண்டும். அதற்கு “நான்; எனக்கு வருகின்றன” என்று பதில் தோன்றும். உடனே, “நான் யார்? ” என்று உள்ளுக்குள் விசாரணை செய்து, “நான்” என்னும் உணர்வின் மூலத்தை தேட முயற்சி செய்ய வேண்டும். இதற்கு “சுய விசாரணை” என்று பெயர். சுய விசாரணை செய்யும்போது, மனம் அலைந்தால் கவலைப்பட வேண்டாம். அலைந்தது என்று உணர்ந்தவுடன், மீண்டும் சுய விசாரணை செய்ய ஆரம்பித்தால் போதும். இது போல் சுய விசாரணை செய்வதால், மனம் தணிந்து அடங்கும். அமைதி உண்டாகும். நல்ல விளைவுகள் சிறிது சிறிதாக தெரிய வரும். மேலும் மேலும் செய்யச் செய்ய இதன் பலன்கள் அதிகரிக்கும்.
5. விவேகமான அறிவுரைகளுடன் தொடர்பு. அமைதியில் உறையும் ஞானியர், சான்றோர், இவர்களின் அறிவரைகளுடன் மன தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். உலகில் உங்களுக்கு இதை விட அதிகமாக வேறு எதுவும் உதவாது.