கோபத்தைத் தணிப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதோ எப்படி

கோபத்தைத் தணிப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதோ எப்படி

Tone down anger t

 

உலகில் பல விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். அதைப் போல பலவித கோபங்களும் உள்ளன. ஆனால், தமக்குக் கோபம் வருவதை உணர்ந்துக் கொண்டு, அது தங்களுக்கும் மற்றவர்களுக்கும் துன்பம் அளிக்கிறது என்பதையும் உணர்ந்துக் கொண்டு, அந்த கோபத்தை எப்படி தணிப்பது அல்லது கட்டுப் படுத்துவது என்று அறிந்துக் கொள்ள விரும்புபவர்களுக்காகத் தான் நான் இதை அளிக்கிறேன்.

உங்கள் கோபத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? 

சாதாரணமாக சொல்லப் போனால், நமக்குப் பிடிக்காதது ஏதாவது நடந்தால், நமக்குள் ஒரு கோபம் எழுகிறது. ஒரு நிகழ்வாலோ,  ஒரு சம்பவத்தாலோ, அல்லது ஒரு நபராலோ அந்த கோபம் தூண்டப்படுகிறது. ஒரு விஷயம் ஒரு விதத்தில் நடக்க வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் உண்மையில் அது வேறு விதமாக நமக்குப் பிடிக்காத முறையில் நடைபெறுகிறது. எனவே நா ஒருவரை அவர் ஒன்றைச் செய்யாததற்காகவோ, அல்லது செய்ததற்காகவோ குறை சொல்கிறோம். நமது கோபமென்னும் விஷத்தை வெளிப்படுத்துகிறோம், அல்லது உள்ளுக்குள் வைத்துக் குமுறிக் கொண்டு ஒரு நாள் வெடிக்கிறோம். 

இவ்வாறு நாம் நமது கோபத்தைக் கொட்டும் போது, அங்கு பதற்றமும் சண்டை சச்சரவும் ஏற்படுகிறது. இது துயரத்தை அளிக்கிறது, கேடும் விளைவிக்கிறது. 

எனவே, ஏற்கனவே நாம் நமக்கு கோபம் வருகிறது என்று உணர்ந்துக் கொண்டுள்ளோம், சிறிதளவு அது எப்படி எழுகிறது என்பதையும் அறிந்துக் கொண்டுள்ளோ. ஆனால், கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது, அல்லது குறைந்த பட்சம் அதை எப்படி தணிப்பது, என்பது தான் முக்கியமான விஷயம்.

யார் என்ன சொன்னாலும், முக்கியமான சாதனைகளை யாரும் உடனடியாக அடுத்த கணமே சாதிப்பதில்லை. அப்படி செய்ய முடியும் என்று யாராவது சொன்னால், அவர்கள் பொய் சொல்கிறார்கள், அதை நம்பாதீர்கள்.

உங்களுக்கும் தெரியும், எல்லோருக்கும் தெரியும், எதற்கும் அறிதலும் பயிற்சியும் தேவை. மேலும் மேலும் செய்யும் பயிற்சி பூரணத்துவம் தரும் என்பதும் உண்மையாகும். எனவே, நமது கோபத்தைக் கட்டுப்படுத்த, எப்படிக் கட்டுப் படுத்துவது என்று நாம் நமக்கே கற்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் அதை நடைமுறையில் பயிற்சியும் செய்ய வேண்டும்.

எந்த ஒரு பிரச்சனையையும் தீர்க்க, முதலில் நாம் நமக்கே அதைப் பற்றி கற்பித்துக் கொள்ள வேண்டியது அவசியம். உங்களது கோபத்தைப் பற்றியும் நீங்கள் அப்படி செய்ய வேண்டும்.

நீங்கள் கோபத்தைப் பற்றி உங்களுக்கே கற்பித்துக் கொள்ளும் வழிமுறைகள் பின்வருமாறு.

முதலாவதாக, நான் முன்பு சொன்னது போல், சாதாரணமாக, நாம் எதிர்பார்ப்பது வேறு விதமாக நிகழும் போது கோபம் எழுகிறது. நமது அடிப்படையான பிரச்சனை என்னவென்றால், நாம் நமது கோபம் நடப்பதை மாற்றும் என்று நினைப்பது தான். கோபம் கொள்வதால், பிரச்சனைத் தீர்ந்து விடும், இத்தகைய நிகழ்வு இனிமேல் நிகழாது என்று நினைக்கிறோம். அதாவது, நாம் நமது கோபத்தால் பிரச்சனையைத் தீர்க்க முயல்கிறோம். நமது கோபத்தைத் தூண்டிய நபரின் மீது கோபம் கொண்டு அதைக் காட்டினால், அவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள், பிறகு எல்லாம் சரியாகி விடும் என்று நினைக்கிறோம்.

ஆனால், உண்மை இதற்கு மாறானதாகும். உண்மையில், நாம் கோபம் கொள்ளும் போது எதையும் தீர்ப்பதில்லை. பிரச்சனை இன்னும் மோசமாகவும் ஆகலாம். அது கெடுதல் அளித்து ஒரு நல்ல உறவை உடைக்கவும் செய்யலாம். இதைப் பற்றி நீங்கள் தீவிரமாக யோசனை செய்து, ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

இரண்டாவதாக, நீங்கள் உங்களையே இந்த கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும். மற்றவர் யாராவது உங்கள் மீது கோபத்தைக் காட்டினால், அல்லது உங்களிடம் கூச்சலிட்டால், அல்லது நீங்கள் செய்ய தவறை கோபத்துடன் சுட்டிக் காட்டினால், உங்களுக்கு அது பிடிக்கிறதா? உங்கள் மீது தவறு இருந்தாலும் இல்லாவிட்டாலும், உங்கள் மீது ஒருவர் கடுமையான கோபம் கொண்டால், உங்களுக்கு அது பிடிக்கிறதா? நிச்சயமாக இல்லை! அப்படியானால், உங்கள் கோபத்தை மற்றவர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?

மூன்றாவதாக, நமது கோபத்தால் நமக்கு எந்த விதமான நன்மையும் கிடையாது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். நமது உடல் நலனுக்கும் அது நல்லதில்லை, மன நலனுக்கும் நல்லதில்லை. கோபமும் கடுஞ்சினமும் பலவித நோய்களை ஏற்படுத்துவதோடு, நமது சந்தோஷத்தையும், மன நிம்மதியையும் நீக்கி விடும். நமது உடல் நலனையும் கெடுத்துக் கொள்ளும் அளவுக்கு கோபத்திற்கு தகுதி இருக்கிறதா?

அடுத்தது, கோபம் நம்மை ஒரு முட்டாளாக்குகிறது என்று புரிந்துக் கொள்ள வேண்டும். நாம் கோபத்தில் எதைச் சொன்னாலும், செய்தாலும், அதைப்  பற்றி பிறகு நாம் வருந்துகிறோம். உண்மையில், பெரும்பான்மையான சமயங்களில், நா முன்பு கோபப்பட்டதை நினைத்து முட்டாள்தனமாக உணருகிறோம். எனவே, நீங்கள் கோபம் கொள்ளும்போது சாமர்த்தியமாக இல்லாமல், மூடத்தனமாக இருப்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும். நம்மை முட்டாளுக்கும் அளவிற்கு கோபத்திற்கு அவ்வளவு தகுதி இருக்கிறதா?

கடைசியாக, கோபம் கொள்வது ஒரு வெறும் பழக்கமாக இருக்கலாம். எதற்கெடுத்தாலும் கோபப்படுவது உங்கள் வழக்கமாகி யிருக்கலாம். மற்றவர்கள் பொறுத்துக் கொண்டே போவதால், உங்களுக்கு சரிப்படாத எந்த சின்னஞ்சிறு விஷயத்தைப் பற்றியும், நீங்கள் ஒப்புக் கொள்ளாத எந்த நடத்தையைப் பற்றியும், உங்களுக்கு கோபம் வருவது வழக்கமாகியிருக்கலாம். இது கூடிய சீக்கிரத்தில் உங்கள் மீதே திரும்பி கேடு விளைவிக்கும் என்பதை நீங்கள் உணர வேண்டும். 

எனவே, மேற்சொன்ன வழிமுறைகள் மூலமாகவும், மற்றும் உங்களது சொந்த வழிகள் மூலமாகவும், கோபத்தைப் பற்றியும் அதன்  விரும்பத்தகாத விளைவுகளைப் பற்றியும், நீங்கள் உங்களுக்கே கற்பித்துக் கொள்ள வேண்டும். 

பெரும்பான்மையானவர்கள் அறியாத அல்லது புரிந்துக் கொள்ளாத ஒரு விஷயம் பின் வருமாறு. உங்களிடம் உள்ள ஒரு குணம் உங்கள் வாழ்வை கெடுதலான விதத்தில் பாதிக்கும்போது, நீங்கள் ஆழ்ந்து சிந்தித்து, அந்த குணம் என்ன, அந்த குணத்தை உண்டாக்கும் குறைபாடு என்ன என்று கண்டுபிடித்து உணர்ந்துக் கொண்டால், இப்படி செய்வதாலேயே அந்த கெட்ட குணம் கூடிய சீக்கிரம் தானாகவே நீங்கி விடும்.

இதை எப்போதும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். எனவே, உங்களது கோபத்தைப் பற்றி சிந்தித்து அதை உணர்வது, உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழியில் ஒரு மிகப் பெரிய காலடியாகும்.

இப்போது அடுத்த முக்கியமான நிலைப்படி வருகிறது. அது பயிற்சியாகும். நடைமுறையில் பயிற்சி செய்யவில்லை என்றால், இதுவரை கற்றுக்  புரிந்துக் கொண்டதெல்லாம் வீண் தான்.

எப்படி பயிற்சி செய்வது? ஒவ்வொரு வாய்ப்பு கிடைக்கும் போதும், ஒவ்வொரு முறை கோபம் எழும் போதும், அதைத் தணிக்க நீங்கள் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். கோபம் எந்த விஷயத்தையும் சரிப்படுத்தாது, நிலவரம் இன்னும் மோசமாகவும் ஆகலாம் என்று ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். 

ஒரு நபர் சொல்வதோ செய்வதோ உங்கள் கோபத்தைத் தூண்டினால், நீங்கள் அவர்களிடம் கோபமாக தவறைச் சுட்டிக் காட்டாமல், முடிந்த வரை கோபத்தைத் தணித்துக் கொண்டு, அமைதியான முறையில் பிரச்சனையைப் பற்றி அவர்களிடம் பேசி, நீங்கள் என்ன தீர்வை விரும்புகிறீர்கள் என்பதையும் நல்ல விதத்தில் தெரிவிக்க வேண்டும். இப்படி செய்தால், நல்ல விளைவுகள் உண்டாகும்; மற்றவர்களுடன் உங்கள் உறவு மேம்படும்; உங்களுக்குப் பிடிக்காத சம்பவம், உங்களது கோபத்தால் நாள் முழுவதுமோ அல்லது இன்னும் அதிகமாகவோ நீடித்திருக்கும் விதத்தில் உங்களுக்குத் துயரம் அளிக்காது. மேலும், உங்களது அமைதியான நடத்தையால், உங்கள் கோபத்தைத் தூண்டியவர், நீங்கள் சொல்வதை கேட்டுக் கொள்ளவும், உங்களது ஆலோசனையும் ஒப்புக் கொள்ளவும் விருப்பம் காட்டுவார்கள். மேலும், தமது தவறை அவர்கள் ஒப்புக் கொள்ளவும் செய்யலாம்.

ஒரு அமைதியான, கோபமற்ற மனதால் பிரச்சனைகளை திறம்பட தீர்க்க முடியும். ஜனங்கள் உங்களை அதிகமாக விரும்புவார்கள். உங்கள் உடல் நலம் மேம்படும். உங்கள் மனதில் நிம்மதியும் சந்தோஷமும் நிலவும். அதற்கு மாறாக, ஒரு கோபமான, மூர்க்கமான மனம், கேடு விளைவிக்கும், உடல் நலக்குறைவையும், துன்பத்தையும் உண்டாக்கும்.

நமது கோபத்தைத் தணிப்போம்; சிறிது சிறிதாக அதைக் கட்டுப் படுத்துவோம். அமைதியாக, சந்தோஷமாக வாழ்வோம்.

 

 

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!