2.1 பரிபூரணானந்தம்
2.1 பரிபூரணானந்தம்
தாயுமானவர் திருப்பாடல்கள்
பாடல் 1 – வரிசை 1
வாசா கயிங்கரிய மன்றியொரு சாதன
மனோவாயு நிற்கும்வண்ணம்
வாலாய மாகவும் பழகியறி யேன்துறவு
மார்கத்தின் இச்சைபோல
நேசானு சாரியாய் விவகரிப் பேன் அந்த
நினைவையும் மறந்தபோது
நித்திரைகொள் வேந்தேகம் நீங்குமென எண்ணிலோ
நெஞ்சந் துடித்தயகுவேன்
பேசாத ஆனந்த நிட்டைக்கும் அறிவிலாப்
பேதைக்கும் வெகுதூரமே
பேய்க்குண மறிந்திந்த நாய்க்குமொரு வழிபெரிய
பேரின்ப நிட்டை அருள்வாய்
பாசா டவிக்குளே செல்லாதவர்க்கருள்
பழுத்தொழுகு தேவதருவே
பார்குமண்ட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே. 1.
பொருள் :
சொற்களும் கைங்கரியங்களும் அன்றி,
மனதையும் மூச்சையும் அடக்கும் வண்ணம் ஒரு சாதனத்தை,
சாதாரண விதத்தில் கூட நான் பழகியிருக்கவில்லை.
துறவு மார்க்கத்தில் இச்சை இருப்பது போல
நான் தீவிரமான விவாதங்கள் செய்வேன்.
அதைப் பற்றிய எண்ணங்களை மறந்த போது, தூங்கி விடுவேன்.
உடல் நீங்கும் என்று எண்ணும் போது,
நெஞ்சம் துடித்து, மயக்கமடைவேன்.
பேசாத மௌன பேரானந்த நிஷ்டைக்கும் இந்த அறிவிலாப் பேதைக்கும்
வெகு தூரம் உள்ளது.
இந்த நாயின் பேய்க் குணத்தை அறிந்துக் கொண்டு,
பேரின்ப நிஷ்டைக்கு ஒரு வழி காட்டி அருள்வாய்.
பாசக் காட்டினுள் செல்லாதவர்களுக்கு பழுத்த நற்பேறுகள் தரும்
தேவ தருவே!
பார்க்கும் அண்டமெல்லாம் எங்கும் நீக்கமற நிறைகின்ற
பரிபூரணானந்தமே!
*பாசங்கள் : (தான்மை, கர்மம், மாயை)
பொருள் : வசுந்தரா
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்.