நயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும்

நயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும்

நயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும்

முதலாவதாக, ஆழ்நிலை தியானம் நமக்கு சந்தோஷமும் மன அமைதியும் அளிக்கும் என்பதற்காகத் தான் அதைச் செய்வதில் ஈடுபடுகிறோம் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆசைகள் நிறைவேறுவதாலும், உணர்ச்சி பிரவாக கிளர்ச்சிகளாலும் ஒரு வித சந்தோஷம் கிடைப்பது போல தோன்றினாலும், அவை நீடித்து நிலைத்து இருப்பதில்லை. மேலும், அவை பிற்காலத்தில் இன்னல்கள் கூட அளிக்கலாம். அல்லது அந்த மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் கடந்த பிறகு உணர்ச்சிகளின் வீழ்ச்சியும் ஏற்பட்டு துயரம் தரலாம். இப்படிப்பட்ட வெளிப்புற நிகழ்வுகளின் தூண்டுதல் இல்லாமல் தானாகவே விளங்கும் சந்தோஷம் இருக்க வேண்டும். அது தான் எப்போதும் நிலைத்திருக்கும் உண்மையான சந்தோஷம். ஆனால், மனம் இதை நம்ப வேண்டும். 

நாம் மனதை இங்கும் அங்கும் எங்கும் ஓடி அலைந்துக் கொண்டே இருக்க பழக்கம் செய்திருப்பதால், அதை அடக்கி அமைதி பெறுவதற்காக, நாம் விருப்பத்துடன் எத்தனம் செய்வது தேவைப் படும். 

நாம் ஆழ்நிலை தியானம் செய்ய ஆரம்பித்தவுடனேயே, மனம் முரண்டடிக்கும். செய்யாமல் இருக்க பல வித பொய்யான சாக்கு போக்குகள் தரும். இந்த சமயத்தில் தான் நாம் நயமாகப் பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும். ஆனால் அதை எப்படி செய்வது?

ரமண மகரிஷி என்னும் ஒரு மாபெரும் ஆசான், இதைப் பற்றி கேட்ட ஒரு பக்தரின் கேள்விக்கு பின்வருமாறு பதிலளித்தார்:

“பயற்சியும் எத்தனமும் தேவை. அது எப்படி என்றால், தனது கொட்டிலில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு முரடான எருதை, அதற்கு தீஞ்சுவையான புல்லை ஆசைக் காட்டி, அங்கும் இங்கும் அலையாதபடி இருக்கச் செய்வது போலாகும்.

அதே போல் இன்னொரு உரையாடலிலும், ரமண மகரிஷி பின்வருமாறு சொல்கிறார்:

ஒரு முரடான அடங்காத எருது பச்சை பசேலென்ற புல்லினால் கவரப் படுகிறது. அதே போல் மனமும் நல்ல எண்ணங்களால் கவரப் பட வேண்டும். 

பக்தர் கேட்டார்: ஆனால் மனம் நிலையாக இருப்பதில்லையே.

மகரிஷி பதிலளித்தார்: இங்கும் அங்கும் அலைந்து வழக்கமாகியுள்ள எருது அவ்வாறு அலைவதில் இன்புறுகிறது. ஆனால், அது தீஞ்சுவையான புல்லினால் தனது கொட்டிலுக்கு ஈர்க்கப் பட வேண்டும். அப்போதும் கூட அது தொடர்ந்து வரம்பைக் கடந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் வயல்களுக்கு சென்றுக் கொண்டிருக்கும். சிறிது சிறிதாக, அதே மாதிரியான நல்ல புல் தனது கொட்டிலிலேயே கிடைக்கும் என்று அந்த எருதுக்கு அறிவுறுத்தப் பட வேண்டும். சில காலம் கழித்து, அது அலையாமல் தனது கொட்டிலிலேயே இருக்கும்.

பிறகு, கொட்டிலிலிருந்து விரட்டினால் கூட அது மற்றவர்களின் வயல்களுக்குப் போகாமல் தனது கொட்டிலுக்கே திரும்பி வந்து விடும் காலமும் வரும்.

அதே போல், மனமும் நல்ல வழிகளில் செல்ல பயிற்றுவிக்கப் பட வேண்டும். அது சிறிது சிறிதாக நல்ல வழிகளில் செல்ல வழக்கப் படுத்திக் கொண்டு அலையாமல் இருக்கும்; பிறகு கெட்ட வழிகளுக்கும் திரும்பாது.

பக்தர் கேட்டார் : மனதுக்கு காண்பிக்க வேண்டிய நல்ல வழிகள் என்ன?

மகரிஷி பதிலளித்தார்: கடவுளைப் பற்றிய எண்ணங்கள். ஆழ்நிலை தியானம்.

 

எனவே, முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் இப்போதே தொடங்கி, மகரிஷி சொல்வது போல், நயந்து பேசி மனதை இணங்கச் செய்து ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட வேண்டும். 

ஆழ்நிலை தியானம் செய்வதற்கு பல வழி முறைகள் உள்ளன. ஒரே ஒரு நல்ல எண்ணத்தின் மீது ஆழ்ந்த சிந்தனை செய்யலாம். அல்லது “நான் யார்?” என்ற முறையில் சுய விசாரணை செய்யலாம். அல்லது மனதை கவனித்து, எண்ணங்கள் எங்கிருந்து எழுகின்றன என்று ஆழ்ந்து பார்க்கலாம்.  வழிமுறை எதுவானாலும் நயந்து பேசி மனதை இணங்கச் செய்வது முக்கியம்.

 

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!