ஆழ்நிலை தியானத்தின் பலன்கள்
ஆழ்நிலை தியானத்தின் பலன்கள்
சந்தோஷம்
உண்மை என்னவென்றால், நமது எண்ணங்கள் செயல்கள் எல்லாம் ஒரே ஒரு காரணத்திற்காகத் தான் : நமது சந்தோஷம். நாம் அமைதியாக சந்தோஷமாக நிம்மதியாக இருக்க விரும்புகிறோம். யாரும் துயரத்துடன் அமைதியற்று இருப்பதற்காக எதையும் செய்வதில்லை. நமது பிரச்சனை என்னவென்றால், நாம் சந்தோஷத்தை தவறான, பகுத்தறிவற்ற வழிகளில் தேடுகிறோம். அவை சந்தோஷம் அளிக்கும் என்று எண்ணி, நாம் பலவித செயல்களிலும் பாதைகளில் ஈடுபடுகிறோம். ஆனால், அவை நமது மனதில் அதிக சுமையையும், இரைச்சலையும், மன அலைவையும் ஏற்படுத்துகின்றன. நாம் செய்யும் செயலை அனுபவித்து இன்புறுவதற்கு பதிலாக, நாம் அதன் விளைவுகளைப் பற்றி அதிகமாக யோசித்து கவலைப் படுகிறோம்.
நாம் ஒரு அசுரனை ஏற்படுத்துகிறோம்
இதற்கெல்லாம் காரணம் நமது “தான்மை உணர்வு” அல்லது “மனம்” தான். அது நம்முள் ஏற்கனவே ஆழ்ந்து பதிந்துள்ள மனப் போக்குகளுக்குத் தகுந்தவாறு எண்ணங்களை உண்டாக்குகிறது, கற்பனை செய்கிறது, கற்பனைச் சித்திரங்கள் உருவாக்குகிறது, மேலும் நமது வாழ்வின் நிகழ்வுகளைத் தவறாகக் காட்சிப் படுத்துகிறது. மனதை நாம் கட்டுப்பாடின்றி தளர்வாக இருக்க விட்டு, அது செல்லும் வழியில் எல்லாம் அதை கண்டபடி செல்ல விட்டால், ஏதோ ஒரு சமயத்தில், நமது கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் விளங்கும் ஒரு அசுரனை ஏற்படுத்துகிறோம்.
நாம் வீட்டுக்குத் திரும்ப வேண்டும்
ஆனால், ஏதோ ஒரு காரணத்தால், நாம் அதிர்ஷ்டவசமாக இதை உணருகிறோம். பிறகு, மனதைக் கட்டுப் படுத்தி உண்மையான சந்தோஷம் பெற்று, திருப்திகரமாக வாழ்வதற்கு வழிமுறைகளை நாடி தேடுகிறோம்.
இதை அடைய நிச்சயமான வழிமுறைகளில் ஒன்று ஆழ்நிலை தியானமாகும். ஏனெனில் அது மனதைச் சுத்தப் படுத்தி, சுமையைக் குறைத்து, ஒருமுக சிந்தனையையும் ஒருமுக கவனத்தையும் ஏற்படுத்துகிறது.
ஆழ்நிலை தியானம் செய்வதன் பலன்கள்
தியானத்தின் நலன்களும் பலன்களும் என்ன என்று அவற்றின் சாராம்சத்தை இங்கு காண்போம்.
- நமது மனநிலை பலமடையும், மேம்படும். யாரும் நம்மை எளிதில் கட்டுப்படுத்த முடியாது.
- உடல்நிலை முன்னேறும், செம்மையுறும்.
- உள்ளிலும் வெளியிலும் அழகு அதிகரிக்கும்.
- எளிதில் மனத் தடுமாற்றம் ஏற்படாது.
- உலகின் நடவடிக்கைகளைச் சரியான நோக்கத்துடன் பார்க்கும் திறமை உண்டாகும்.
- நமது தொழிலையும் செயல்களையும் நடத்த செயல்திறனும், திறமையும் பெருகும், வளர்ச்சியுறும்.
- வாழ்வில் நமது நோக்கம் நல்லார்வமும், நேர்திசையும், தெளிவும், உற்சாகமும் கொண்டதாக அமையும்.
- நல்லவர்களாக, இரக்கம் கொண்டவர்களாக, மன்னிக்கும் தன்மை உடையவர்களாக, அன்புள்ளவர்களாக, மற்றவர்கள் விரும்புபவர்களாக நாம் இருப்போம்.
- சமூகத்திலும் நமக்கு மதிப்பும், செல்வாக்கும் கிடைக்கும்.
- மற்றவர்களுடன் உறவுகள் மேன்மையுறும். அவற்றின் உண்மையான பொருள் புலப்படும்.
- தியானம் செய்யச் செய்ய முன்பை விட அதிக சந்தோஷமும், மன அமைதியும் உள்ளவராக மகிழ்வுறுவோம்.
- பொதுவில் ஒரு சொல்லமுடியாத, விளக்க முடியாத அமைதியும் சாந்தமும் தோன்றும்.
- துன்பங்களும், நோய்களும் வரும்போது, அவை நம்மை முன்பு பொல துன்புறுத்தாது. அவற்றை நாம் முன்பை விட மேலாக சமாளிக்கும் திறன் ஏற்படும்.
- கடினமான இன்னல்களும் பிரச்சனைகளும் ஒரு கனவு போல, நமது வாழ்வில் ஆழ்ந்த வடு அமைக்காமல் கடந்து செல்லும்.
- கடைசியாக, இவையெல்லாவற்றையும் நாம் மது/சாராயம், மருந்துச் சரக்குகள் போன்ற எந்த தீய நெறிக்கும் அடிமையாகாமல், நமது சொந்த மனத்திண்மையாலும், சக்தியாலுமே அடைகிறோம்.
இதிலிருந்து மொத்தத்தில் தியானம் செய்வதால் நமக்கு நன்மை தான் என்று புரிகிறது. அதோடு, தியானம் செய்ய வயது, பாலினம், மதம் போன்ற விதி முறைக் கட்டுப்பாடுகள் கிடையாது. எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தியானம் செய்யலாம். தனியாகச் செய்வது சிறந்த விதம் என்றாலும், முதன்முதலில் பயிற்சி செய்யும் போது, மற்றொருவருடனோ, மற்றும் பலருடனோ செய்வது ஒருவேளை எளிதாக இருக்கக் கூடும். அதுவும், ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட உதவும் சகாய மார்க்கங்களான ஜபம் செய்தல், பக்திப் பாடல்கள் இசைத்தல், இவற்றைச் செய்யும் போது மற்றவர்களுடன் செய்வது உபயோகமாக இருக்கலாம்.
எல்லா செயல்களையும் போல், ஆழ்நிலை தியானமும் முதலில் கடினமாகவும், இயல்பாக இல்லாததாகவும் தோன்றலாம். ஆனால், நாம் அதை மேலும் மேலும் பயிற்சி செய்யச் செய்ய, நாம் நமது இயல்பான உண்மையான சந்தோஷத்தை உணருவதற்கு அது தான் மிகவும் சிறந்த வழிமுறை என்பது நமக்குத் தெளிவாகும்.